மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான  உணவு, தண்ணீர் என அனைத்தும் விற்பனைக்கு வந்து விட்டது. இனி  காற்று மட்டும் தான் பாக்கி, விட்டால் அதுவும் விற்பனைக்கு வந்துவிடும் என்று கேலியாக பேசப்படுவதுண்டு. ஆனால் அது பேலி அல்ல அல்ல. உண்மைதான். ஆம் தலைநகர்  டெல்லியில் தற்போது  காற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லி தற்போது மோசமான காற்றின் தரக் குறியீட்டு புள்ளி விவரங்களைக் கொண்ட எரிவாயு அறையாக மாறியுள்ளது.

டெல்லியில் இன்று காலையில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு (AQI) 482 , லோதி சாலை பகுதி 475, பூசா 503, டெல்லி பல்கலைக்கழக பகுதி 494, விமான நிலையம் 508, நொய்டா 583, குருகிராம் 548 ஆக பதிவாகி உள்ளது.

இந்த காற்றின் தரக் குறியீடு மதிப்பீடுகள் அனைத்தும் 'கடுமையான' பிரிவின் கீழ் வருகின்றன. (401-500 வரம்பிற்குள் காற்றின் தரக்குறியீடு 'கடுமையானது' என்று கருதப்படுகிறது). 

இந்த வரம்பில், மாசுபடுத்திகளின் கனமான துகள்கள் காற்றில் நிறுத்தப்படுகின்றன. இவை ஆரோக்கியமான மக்களுக்கு கூட சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் நுரையீரல் / இதய நோய் உள்ளவர்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். 

இதனால் டெல்லியில்  சுத்தமான காற்றை சுவாசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள கட்டணத்துடன் கூடிய ஆக்சிஜன் பாருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

தெற்கு டெல்லியின் சாக்கெட் பகுதியில் உள்ள ஆக்சிஜன் பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள் லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் உள்ளிட்ட 7 நறுமணங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதனோடு சேர்த்து ஆக்சிஜனை சுவாசிக்கலாம்.

இதுபற்றி பேசிய ஆக்சிஜன் பார் உரிமையாளர் அஜய் ஜான்சன், நாளொன்றுக்கு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார். கலி முத்திப்போச்சுன்னு சொல்லுவாங்களே..அது இதுதான் போலும்…