தமிழகத்தில்தான் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது என்றும், தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் என்றும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ். கோயில்கள் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறாக பேசும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இந்து கோயில்கள் பற்றியும், இந்து கடவுள்களைப் பற்றியும் இழிவாக பேசியுள்ளார். 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது என்றும் தமிழகத்தில்  கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் எனப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மோகன் சி.லாசரஸ்-ன் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் போலீசில் புகார் தெரிவித்தனர். 

அதேபோல், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மோகன் சி.லாசரஸ் கைது செய்யப்படும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் அளிக்கப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.