தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முன்னர் சில கோரிக்கைகளை லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஒற்றுமை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்றும் நாளையும் பெங்களூருவில் இரண்டாவது கூட்ட நடைபெறவுள்ளது. அதேசமயம், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது.

அதன்படி, கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மற்றும் கூட்டணியில் இணைய விருப்பம் காட்டும் ஒத்த சிந்தனை உள்ள பிற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முன்னர் சில கோரிக்கைகளை லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பீகார் மாநிலத்தில் ஆறு மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிராக் பஸ்வான் கோருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிராக் பஸ்வானை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை கடுமையாக முயற்சிக்கிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது அழைப்புக் கடிதத்தில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி ஒரு முக்கிய கூட்டாளி என்று விவரித்தது மட்டுமின்றி, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து சிராக் பஸ்வான் தனது கோரிக்கைகளை ஏற்கனவே பாஜக தலைவர்களிடம் முன்வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அமைச்சரவையில் சிராக் பஸ்வானிற்கு இடம் அளிக்கப்படும்என்று ஊகங்கள் பரவி வருகின்றன. இருப்பினும், அது குறித்து சிராக் பஸ்வான் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என தெரிகிறது.

2024 தேர்தல்: பாஜக எப்படி தயாராகிறது? வியூகம் என்ன?

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கடந்த வெள்ளிக்கிழமை சிராக் பஸ்வானை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு இரண்டாவது முறையாக அழைப்பு விடுத்துள்ளார். இது அவரது முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதாதளம் முறித்துக் கொண்டதுடன், ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. நிதிஷ்குமார் முதல்வராக தொடரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பணியிலும் நிதிஷ்குமார் முன்னின்று ஈடுபட்டு வருகிறார். எனவே, பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியுடனான கூட்டணி பாஜகவுக்கு முக்கியமாக இருக்கிறது.

தற்போதைய தகவல்களின்படி, ஹாஜிபூர் உட்பட 6 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கோருவதாக தெரிகிறது. ஹாஜிபூர் தொகுதியின் எம்.பி.யாக சிராக் பஸ்வானின் சித்தப்பாவும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான பசுபதி குமார் பராஸ் உள்ளார். மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் அரசியல் வாரிசு தான்தான் என கூறி வரும் அவர், ஹாஜிபூர் தொகுதியை தனது மருமகனுக்கு விட்டுக் கொடுக்க மறுத்து வருகிறார்.

“நான் ஏன் ஹாஜிபூரிலிருந்து மாற வேண்டும்? 2019 மக்களவைத் தேர்தலில் ராம் விலாஸ் பஸ்வானின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளேன். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஜமுய் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் (சிராக் பஸ்வான்) ஏன் எனது தொகுதியை கேட்க வேண்டும்.” என பசுபதி குமார் பராஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், ராம் விலாஸ் பாஸ்வானால் நிறுவப்பட்ட லோக் ஜனசக்தி கட்சியின் பாரம்பரிய இடமாக ஹாஜிபூர் உள்ளதாக சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். “எனது தந்தை ஹாஜிபூர் தொகுதியில் இருந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது தந்தையின் பங்களிப்பை தொகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.” என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

லோக் ஜன்சக்தி கட்சித் தலைவரும், ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையடுத்து, அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. லோக் ஜன்சக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டார். தொடர்ந்து, சிராக் பஸ்வானுக்கு பதிலாக லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2021ஆம் ஆண்டில் பசுபதி குமார் பராஸ் பதவியேற்றார்.

இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியானது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியும், அவரது சித்தப்பாவும், ராம்விலாஸ் பஸ்வானின் தம்பியுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியும் செயல்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பசுபதி குமார் பராஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.