தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகள் சுற்றுலா வந்தபோது, அவர்களை அனுமதிக்க மறுத்து வெளியே நிற்க வைத்து டெல்லி ‘ஷாப்பிங் மால்’ நிர்வாகம் மனிதநேயமற்று நடந்துள்ளது.

 மகாராஷ்டிரவில் உள்ள தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகள் 40 பேரை ஸ்வராஜ் இந்தியா என்ற அமைப்பு ஆசிரமம் அமைத்து வளர்த்து வருகிறது. இந்த ஆசிரமத்தில் இருக்கும் 40 குழந்தைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘கிசான் முக்தி யாத்ரா’வில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை  வந்திருந்தனர்.

அந்த யாத்திரை முடிந்தபின், வெயில் கொடுமை தாங்க முடியாமல், டெல்லியில் தெற்குப் பகுதியில் டி.எல்.எப். நிறுவனத்தின் மிகப்பெரிய வணிகவளாகத்தில் குழந்தைகளை ஆசிரம நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர்.

ஆனால், குழந்தைகள் குறித்த விவரத்தை அறித்த ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் அவர்களை அனுமதிக்க மறுத்து வெளியே காக்க வைத்தனர். அதன்பின் இந்த விஷயம்  ஊடகங்களுக்கு தெரியவந்தவுடன், சர்ச்சைக்கு பயந்து, குழந்தைகளை அனுமதித்தனர்.

இது குறித்து ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் டெல்லி பிரிவைச் சேர்ந்த அனுபம்என்பவர கூறுகையில், “ தற்கொலை செய்துகொண்ட மகாராஷ்டிரா விவசாயிகளின் குடும்பங்களால் அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் நாசிக்கில் உள்ள எங்கள் ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கிசான் முக்தி யாத்ராவில் கலந்துகொள்வதற்காக குழந்தைகளை அழைத்து வந்திருந்தோம். புதன்கிழமை அன்று டெல்லியில் வெயில் வாட்டி வதைத்ததால், அதனால் ஏசி வசதி செய்யப்பட்ட இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அதனால், நாங்கள் குழந்தைகளை ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றோம்.

ஆனால் குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று கூறிய வணிக வளாக அதிகாரிகள், எங்களை உள்ளே அனுப்ப மறுத்துவிட்டனர். இந்த பிரச்சினையால் மாலுக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் குழந்தைகள் காத்திருந்தோம். இந்த சம்பவத்தில் ஊடகங்களும் சம்பந்தப்பட்டதை அறிந்த பின்னரே மால் நிர்வாகம், குழந்தைகளுக்கு உணவையும், விளையாட்டையும் அனுமதித்தது'' என்றார்.

ஆனால் நடந்த சம்பவங்களை மால் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தரப்பில் கூறுகையில், “ குழந்தைகள் அனைவரும் வெள்ளை குர்தா மற்றும் தொப்பி அணிந்து வந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் நிறுத்தப்பட்டனர் ஆனால், குழந்தைகளுக்கு உணவும், விளையாடவும் அனுமதித்தோம் ’’ என விளக்கம் அளிக்கப்பட்டது.