உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இதுதொடர்பாக விசாரணையையும் நடைபெற்று வருகிறது.

மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன.

70 பச்சிளம் குழந்தைகள் பலியான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையீடு செய்து, தாமாக முன்வந்து விசாரித்து, உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும். 

மேலும், இந்த மரணங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், அலகாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகி தீர்வு காணுமாறு மனுதாரரை கேட்டுக் கொண்டது.