பிரதமர் வீடு திட்டத்துக்கு போட்டியாக கிராமப்புற மக்களுக்காக ஒரு புதிய வீட்டு திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது

சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்துக்கு போட்டியாக, கிராமப்புற மக்களுக்கு வீழு வழங்கும் புதிய வீட்டுத் திட்டமான 'Nyay Yojana- நியாய் யோஜனா' திட்டத்தை தொடங்க அம்மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், அம்மாநிலத்துக்கு நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரவுள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், வகுக்கப்பட வேண்டிய வியூகங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி அண்மையில் ஆலோசித்தனர்.

இந்த நிலையில், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதமரின் திட்டத்துக்கு போட்டியாக கிராமப்புற மக்களுக்கு வீடு வழங்கும் Nyay Yojana திட்டத்தை சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை தொடங்குவதற்கு முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ஒதுக்கியுள்ளார். அம்மாநில மழைக்கால சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, அவர் சமர்ப்பித்த துணை பட்ஜெட்டில், கிராமின் ஆவாஸ் நியாய் யோஜனா (கிராமப்புற வீட்டு வசதி திட்டம்) தொடங்குவதற்கு ஆரம்பத் தொகையான ரூ.100 கோடியை ஒதுக்கி அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

பஞ்சாபில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசும் பாகிஸ்தான்!

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை அம்மாநில காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய திட்டத்துக்கான அறிவிப்பு புத்திசாலித்தனமான நகர்வு என அம்மாநில அரசியலை கூர்ந்து கவனிக்கும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் திட்டத்திற்கு மாநிலம் தனது பங்கை வழங்கவில்லை எனவும், ஏழை பயனாளிகள் வீடுகள் பெறுவதை மாநில அரசு தொடந்து புறக்கணித்து வருவதாகவும் அம்மாநில பாஜகவினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அண்மையில், நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சத்தீஸ்கர் சென்ற பிரதமர் மோடி கூட, ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் விவகாரத்தில் பூபேஷ் சிங் பாகேல் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், திருப்தியற்ற நடவடிக்கைகள் காரணமாக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், அம்மாநிலத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.