சத்தீஸ்கர்: நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 26 நக்சல்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடரும் தேடுதல் வேட்டைகள்

செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, "மோதலில் ஒரு வீரர் காயமடைந்ததாகவும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ஜவான் காயமடைந்தார், ஆனால் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்" என்று அவர் கூறினார்.

நக்சல் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதி

மற்றொரு துணை முதல்வர் அருண் சாவ் இந்த நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினார். “2026 மார்ச் மாதத்திற்குள் சத்தீஸ்கர் மாநிலத்தை நக்சல் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும், எங்கள் அரசு அமைந்த பிறகு, பஸ்தாரை நக்சல் இல்லாததாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். நாராயண்பூரில், இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஒரே மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். 2026 மார்ச் மாதத்திற்குள் பஸ்தார் நக்சல் இல்லாததாக மாற, எங்கள் பாதுகாப்புப் படைகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

கடும் நடவடிக்கைகள் தொடரும்

சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் ராமன் சிங் சத்தீஸ்கர் காவல்துறையைப் பாராட்டியுள்ளார். “காவல்துறை 26 நக்சல்களை கொன்றுள்ளது. இது ஒரு பெரிய நடவடிக்கை, இந்த நடவடிக்கையில் எந்த காவல்துறையினரும் கொல்லப்படவில்லை. 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் போது கூட நக்சல்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விஜய் சர்மா மற்றும் எங்கள் அனைத்துப் படைகளையும் நான் பாராட்டுகிறேன். பஸ்தார் மக்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது, மேலும் பஸ்தார் தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

'ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’

நாராயண்பூர் சம்பவத்திற்கு முன்னதாக, சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டலு மலை (KGH) அருகே நக்சல்களின் முதுகெலும்பை உடைக்க பாதுகாப்புப் படைகள் 'ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்' நடத்தின. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுப் படைகள் ஏப்ரல் 21 மற்றும் மே 11-க்கு இடையில் நடத்திய 21 நாள் நீண்ட நடவடிக்கையில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 214 நக்சல் மறைவிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல்களின் போது மொத்தம் 450 IEDகள், 818 BGL குண்டுகள், 899 கோடெக்ஸ் மூட்டைகள், வெடிப்பான்கள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கூடுதலாக 12,000 கிலோகிராம் உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.