சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், கண்ணீர்மல்க தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

கடந்த டிசம்பரில் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 15 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாஜக வீழ்த்தி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த பூபேஷ் சிங் பாகல் முதல்வராக பதவியேற்றார். 

இதனிடையே, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. இதனால் அக்கட்சியில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், தம்மை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு ராகுல் காந்திக்கு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு மோகன் மார்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவில் உரையாற்றிய  பூபேஷ் பாகல், தொண்டர்கள் ஆற்றிய பணிகளுக்கும், தமக்களித்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது திடீரென கண்கலங்கிய அவர், சற்று நேரம் பேச்சை நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டு பின்னர் மீண்டும் பேசினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பாகல் நீடுழி வாழ்க, காங்கிரஸ் கட்சி நீடுழி வாழ்க போன்ற முழக்கங்களை எழுப்பினர்.