கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக எடியூரப்பா இருந்து வருகிறார். சமீபத்தில் அங்கு 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள 6 தொகுதியில் வெற்றி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இதனால், ஆட்சியைக் கவிழ்ப்போம் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வியூகங்கள் உடன் இடைத்தேர்தலைச் சந்தித்தனர். 

ஆனால், முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதே நேரத்தில் பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பின்னர், இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது, சித்தராமையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்வதற்கான "ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தீவிர மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத்தொடங்கினர்.