அவ்வையின் ஆத்திசூடியை நினவாக்க, வார்த்தைக்கு வலுசேர்க்க சென்னை பெசன்ட் நகரில் காய்ந்த வயிறுகளைபசியாற்றும் பிரிட்ஜ் நிறுவப்பட்டுள்ளது.

‘ஐயமிட்டு உண்’ என்று அவ்வையின் ஆத்திசூடியில் பாடல் இருக்கிறது. உண்பதற்கு முன் யாருக்கேனும் தானம் செய்து உண்ணுங்கள் என்ற அர்த்தத்தை நிதர்சனமாக்கும் வகையில் இந்த பிரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடந்த சென்றவர்களுக்கு ‘ஐயமிட்டு உண்’ என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டு இருந்த இந்த பிரிட்ஜை சற்று வியப்புடனே கடந்து சென்றார்கள்.

சென்னையைச் சேர்ந்த பல்மருத்துவரான டாக்டர் இசா பாத்திமா என்பவர்தான் இந்த பசியாற்றும் பிரிட்ஜை நிறுவினார். இதன் மூலம் தேவையுள்ளவர்கள் இந்த பிரிட்ஜ் மூலம் பயன்பெற முடியும் என்பதுதான் இதன் சாரம்சமாகும்.

இது குறித்து டாக்டர் இசா கூறுகையில், “ இந்த பிரிட்ஜ் பணக்காரர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ இல்லை. யாருக்கு தேவை உள்ளதோ அவர்களுக்கானது. யார் வேண்டுமானாலும், இந்த பிரிட்ஜில் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை வைத்து விட்டு செல்லலாம், தேவை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும்எடுத்து செல்லலாம். இதற்காக சென்னை மாநகராட்சியில் முறைப்படி அனுமதியும் பெற்றேன். போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாதவாறு இருக்க வேண்டும் என்றனர். பெசன்ட்நகரைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் பிரிட்ஜூக்கு தேவையான மின்சாரத்தை வழங்கியுள்ளார். இதை அமைக்க ரூ.50 ஆயிரத்துக்குள் செலவானது’’ என்று தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார்போல், அந்த வழியாகச் சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுநர், தன்னால் இயன்ற 3 பிஸ்கட் பாக்கெட்டுகளை அந்த பிரிட்ஜில் வைத்து சென்றார்.  அந்த வழியாகச் சென்ற ஒரு குடும்பத்தினர், தர்பூசனிப்பழத்தையும், சிலரே சில பாட்டில் தண்ணீர் பாட்டிலையும் அந்த பிரிட்ஜில் வைத்தனர்.

 இந்த பிரிட்ஜ் குறித்து அறிந்ததுடன், அந்த வழியாகச் சென்ற ஒரு மனிதர் தனக்கு தேவையான பிஸ்கட் பாக்கெட்களை எடுத்து சாப்பிட்டுச் சென்றார்.

ஒய்வு பெற்ற பொறியாளரான நீலமேகம் என்பவர் கூறுகையில், “ நான் இந்த பிரிட்ஜ் குறித்து கேள்விப்பட்டு பார்க்க வந்தேன். இதுபோல் புதிவிதமான முயற்சியை எடுத்து நான்  பார்த்தது இல்லை. நான் வீட்டுக்குச் சென்று என்னால் முடிந்த உணவுப்பொருட்களை இங்கு கொண்டு வந்து வைக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

சென்னையில் இதுபோல் சாமானியர்களுக்கு, தேவை உள்ளவர்களுக்கு பசியாற்றும் இந்த பிரிட்ஜ் முதல்முறையாக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்....

கடந்த மே மாதம் மும்பையில், லோகன்ட்வாலா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், பசியாற்றும் பிரிட்ஜை நிறுவினார். மேலும், ஜனவரி மாதம் வெர்சோவா நில நிதி அமைப்பும் இதேபோல பிரிட்ஜ் அமைத்தது.

கோவையில் கடந்த 2016ம் ஆண்டு ‘நோ புட் வேஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் ஓட்டல்கள், திருமண வீடுகள் போன்றவற்றில் மீதமாகும் உணவுகளை சேகரித்து தேவை உள்ளவர்களுக்கு பசியாற்றி வருகிறது.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் கடந்த 2016ம் ஆண்டு மினு பாலின் என்பவர் ஒரு மரத்தடியில் இதுபோன்ற பிரிட்ஜை நிறுவினார்.