பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு 'பிரளய்' ஏவுகணைகளை அடுத்தடுத்து வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இந்த ஏவுகணை, 150 முதல் 500 கி.மீ வரை இலக்குகளைத் தாக்கும் வலிமையை கொண்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பிரளய்' (Pralay) ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

இது இந்தியாவின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சாதனைச் சோதனை (Salvo Launch)

ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) இன்று காலை 10:30 மணியளவில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஒரே ஏவுதளத்தில் இருந்து இரண்டு பிரளய் ஏவுகணைகள் மிகக் குறுகிய கால இடைவெளியில் விண்ணில் ஏவப்பட்டன. இவை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரளய் ஏவுகணையின் சிறப்பம்சங்கள்

இது தரைப்பரப்பில் இருந்து தரைப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய குறுகிய தூர குவாசி-பாலிஸ்டிக் (Quasi-ballistic) ஏவுகணையாகும். இது 150 கி.மீ முதல் 500 கி.மீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. ஒலியை விட பல மடங்கு வேகத்தில் (Supersonic) செல்லக்கூடியது.

எதிரி நாட்டு ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிடம் சிக்காமல், நடுவானில் தனது பாதையை மாற்றிக்கொள்ளும் (Manoeuvrable) திறன் இதற்கு உண்டு. 350 கிலோ முதல் 700 கிலோ வரையிலான வெடிபொருட்களைச் சுமந்து செல்லும்.

முக்கியப் பங்களிப்பு

இந்த ஏவுகணை ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மைய இமாரத் (RCI) மூலம் மற்ற DRDO ஆய்வகங்கள் மற்றும் பாரத் டைனமிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், DRDO மற்றும் ராணுவத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இந்தச் சோதனையின் மூலம் பிரளய் ஏவுகணையின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது" என அவர் பாராட்டியுள்ளார். DRDO தலைவர் சமீர் வி காமத், இந்த ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.