திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் வைக்கும் திருவிழா மூலம், இனிமேல் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்கப் போகிறது.

சொந்த வீடு

புரியவில்லையா... இந்த கோயிலில் பொங்கல் வைக்க வரும் பெண்கள் அனைவரும்  3 புதிய செங்கல்களில் அடுப்பு அமைத்து பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்த திருவிழா முடிந்தபின் விட்டுச் சென்ற செங்கல்களை வைத்து ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுக்க திருவனந்தபுரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆற்றுக்கால் பொங்கல்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். பிப்ரவரி-மார்ச் மாதங்களில்  ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபாடுவார்கள். இந்த கோயிலின் பொங்கல் வைக்கும் திருவிழா கின்னஸ் சாதனையிலும் கடந்த 2009ம் ஆண்டு இடம் பெற்றுள்ளது.

7கி.மீ வரை வரிசை

இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு 3 செங்கல்களை அடுப்பாக வைத்து மண்பானை அல்லது உலோக பானைகளில் பொங்கலிடுவார்கள். சில சமயம், பெண்கள் பொங்கலிடும் வரிசை 7 கி.மீவரை கூட செல்லும்.

லட்சக்கணக்கில் செங்கல்

திருவிழா முடிந்தபின், கிடைக்கும் செங்கற்கள் மட்டும் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கும். அந்த செங்கற்களை இதுநாள் வரை மாநகராட்சி துப்புறவு அதிகாரிகள் அப்புறப்படுத்தி மட்டுமே வந்தனர்.  சிலர் அதை அள்ளிச்சென்று ஒரு செங்கல் ரூ.20 முதல் 30க்கு விற்பனை செய்து வந்தனர்.

லைப் திட்டம்

அடுத்த ஆண்டு முதல், திருவனந்தபுரம் மாநகராட்சி அந்த செங்கல்களை எடுத்து, ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளது. கேரள அரசின் ‘லைப்’(LIFE) என்ற திட்டத்தின் மூலம் இது செயல்படுத்தப்பட உள்ளது.

நகரை சுத்தமாக்கும்

இது குறித்து திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாத் கூறுகையில், “ லைப் திட்டம் என்பது ஏழை மக்களுக்கு உதவுவது மட்டுமல்ல, நீண்டகாலமாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் கனவுகளையும் நிறைவேற்றும், நகரத்தையும் சுத்தமாக்கும்.

ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா முடிந்தபின், நகரம் முழுவதும் லட்சக்கணக்கில் செங்கல் குவிந்துகிடக்கும். இதை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மிக சிரமப்பட்டு சுத்தம் செய்து, குப்பைகளோடு செங்கலையும் எரிந்து விடுவார்கள்.

வீடு கட்ட

ஆனால், அடுத்த ஆண்டில் இருந்து இந்த செங்கல்களை சேகரித்து, வீடு இல்லாத ஏழைகளிடம் கொடுத்து வீடு கட்ட பயன்படுத்த கூறப்படும்.

இதற்காக பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு 5 ஆயிரம் செங்கல்கள் வரை சிறியவீடுகள் கட்ட இலவசமாக அளிக்கப்படும். செங்கல்கள் தவிர்த்து ரூ.3.50 லட்சம் வரை வீடு கட்ட நிதியுதவியும் தரப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் 4.70 லட்சம் பேர் வீடு இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு சொந்த வீடு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.