சந்திரயான்-3 அனைத்து வகையில் வெற்றி பெற வேண்டும்: இஸ்ரோ முன்னாள் தலைவர்!
நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்
நிலவை ஆராய்ச்சி செய்யும் பணிகளில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியது. அதேசமயம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டரானது நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. சந்திரயான்-3 திட்ட இயக்குநரான பி.வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பின் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4ஆவது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
இந்த நிலையில், சந்திரயான்-3 நிலவுக்கு அனுப்பும் திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என என மூத்த விண்வெளி விஞ்ஞானியும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா கடக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலவின் மேற்பரப்பில் இறக்க திட்டமிடப்பட்டுள்ள மென்மையான தரையிறக்கம் மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சந்திரயான்-2 லேண்டரின் சாஃப்ட் லேண்டிங் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தோல்வியடைந்தது. சந்திரயான்-2 திட்டத்தின் போது எதிர்கொண்ட சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வின்கலத்தின் அமைப்புகளை இஸ்ரோ பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லை நாம் கடக்கும் வகையில், இந்த பணி எல்லா வகையிலும் வெற்றிபெற வேண்டும்” எனவும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ தலைவராகவும், விண்வெளித் துறையில் செயலாளராகவும் மாதவன் நாயர் பதவி வகித்த ஆறு ஆண்டு காலத்தில் சுமார் 25 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.
சந்திரயான் 3 கவுன்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!
நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதியில் சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “இது மிகவும் கடினமானது; மிகவும் சிக்கலானது. முதன்முறையாக அறியப்படாத பிரதேசத்தில் தரையிறக்க உள்ளோம். எனவே, நிறைய கவலையும் உள்ளது. நாம் காத்திருந்துதான் அதனை பார்க்க வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக எதுவும் தவறு நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். ஆனால், எதனையும் உறுதியாக கூற முடியாது. பல துணை அமைப்புகள் மற்றும் கூறுகள் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு பெரிய நிகழ்வுதான் இது. எங்காவது ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும், நாம் ஒரு பிரச்சனையில் சிக்கலாம். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றார்.
விண்கலம் ஏவப்படுவதற்கான முந்தைய ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன. அனைத்து அம்சங்களையும் கவனமாக பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன். எந்தவொரு சிக்கலையும் சிறு பிரச்சினையையும் ஒதுக்கித் தள்ள வேண்டாம் எனவும் மாதவன் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.