இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அது வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் அன்றி பிற காரியங்களுக்கு மக்கள் வெளிவரக் கூடாது என்றும் அவ்வாறு வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து 1,637ஐ எட்டியுள்ளது. இதனால் ஏப்ரல் 14 ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அதை மத்திய அரசு மறுத்தது. இதனிடையே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசால் இத்தாலி நாட்டில் சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்களே இறக்கின்ற நிலை நமது நாட்டில் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

6 வார பச்சிளம் குழந்தை கொரோனாவிற்கு பலி..! மக்கள் பேரதிர்ச்சி..!

சீனாவில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 62 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது போல இந்தியாவிலும் குறைந்தபட்சம் 49 நாட்களாவது பிறப்பித்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொரோனா வைரஸின் கோர பிடியில் சிக்கி நிலைகுலைந்திருப்பது போல இந்தியாவிலும் நிகழ்ந்தால் பொருளாதாரத்தின் நிலைமை படுமோசமாகிவிடும் என்றும் அதன்காரணமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் சந்திரபாபு நாடு தெரிவித்துள்ளார்.