உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 46 ஆயிரத்து 537 பேர் பலியாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் கொரோனவிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக அதிகரித்துவருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் இருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 4 ஆயிரத்து 259 பேர் கொரோனா வைரசால் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்கப்பட்ட பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு கடந்த 6 வாரங்களுக்கு முன்பாக குழந்தை ஒன்று பிறந்தது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 

அதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை இருந்துவந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது . இதை அம்மாநில கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலகளவில் பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை ஒன்று கொரோனா விற்கு பலியான சம்பவம் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.