தன்னிடம் வம்பு வைத்துக் கொண்டால் இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என பாஜக நிர்வாகிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக காகிநாடா மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மோடியை ஆந்திர மாநிலத்தின் விரோதி என்று சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு வாகனத்தை அம்மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்டோர் முற்றுகையிட்டனர். மேலும் பிரதமருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டனக் குரல்களை எழுப்பினர். இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு, கான்வாயை விட்டு வெளியே வந்து பா.ஜ.க நிர்வாகிகள் பார்த்து நீங்கள் யாருடன் மோதுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் விளையாடுவதாக கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து தன்னிடம் வம்பு செய்தால் பாஜக நிர்வாகிகள் இருக்கம் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன்.

பிரதமர் மோடியின் பெயரை வெளியே சென்று சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். ஆந்திராவில் மோடியை ஆதரிப்பதற்கு பாஜக-வினர் வெட்கப்பட வேண்டும் என்றார். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.