இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் 1,750 கி.மீ தூரத்திற்கு மொபைல் சிக்னல் இல்லாத 'டெட் ஜோன்' பகுதிகளை NHAI கண்டறிந்துள்ளது. அவசர கால பாதுகாப்பு மற்றும் தடையற்ற சேவைகளுக்காக, இப்பகுதிகளில் நெட்வொர்க்கை மேம்படுத்த TRAI-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகளில் மொபைல் சிக்னல் கிடைக்காத 'டெட் ஜோன்' (Dead Zones) பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு உடனடியாக நெட்வொர்க் வசதியை மேம்படுத்த மொபைல் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு DoT மற்றும் TRAI அமைப்புகளிடம் NHAI கோரிக்கை விடுத்துள்ளது.

1,750 கி.மீ தூரத்தில் சிக்னல் இல்லை!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நடத்திய விரிவான ஆய்வில், நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுமார் 424 இடங்களில் மொபைல் சிக்னல் மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 1,750 கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியுள்ள இந்தப் பகுதிகளில், அவசர காலங்களில் தொடர்புகொள்வது பெரும் சவாலாக உள்ளது.

குறிப்பாக, புதிய பசுமை வழிச்சாலைகள் (Greenfield Expressways) மற்றும் கிராமப்புறங்கள் வழியாகச் செல்லும் சாலைகளில் இந்தச் சிக்கல் அதிகமாக இருப்பதாக NHAI தெரிவித்துள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை?

விபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் அல்லது ரோந்து வாகனங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ரீதியான சேவைகள் (Fastag போன்றவை) சிக்னல் இல்லாததால் பாதிக்கப்படுகின்றன.

தொலைதூரப் பயணங்களின் போது பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க முடியாமல் போகிறது.

SMS அலர்ட்

நெட்வொர்க் மேம்பாடு மட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பிற்காக மற்றொரு முக்கிய கோரிக்கையையும் NHAI முன்வைத்துள்ளது. விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் (Accident-prone zones) மற்றும் கால்நடைகள் அதிகம் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்த இடத்தை வாகனங்கள் நெருங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பயணிகளின் மொபைலுக்கு SMS அல்லது Flash Message அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே எச்சரிக்கையடைந்து, கவனமாக வாகனத்தைச் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 1,665 அபாயகரமான இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எங்கே பாதிப்பு?

இந்த ஆய்வில், தமிழகத்திலும் சில முக்கிய சாலைகளில் சிக்னல் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தாம்பரம் - திண்டிவனம் இடையேயான சாலையில் சுமார் 17 கி.மீ தூரத்திற்கு மொபைல் இணைப்பு சரியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.