ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்யக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தர்மாதிபாத மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இருக்கும் போது, கோதாவரி நிதிக்கு குறுக்கே மகாராஷ்டிரா மாநில அரசு பப்ளி அணையை கட்டி வந்தது.இந்த அணையை கட்டக் கூடாது என்று வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை நாநீத் மாவட்டத்தில் கடந்த 2010, ஜூலை 18-ந்தேதி நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் போது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரப்பாபு நாயுடு, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை புனே போலீஸார் கைது செய்தனர்.பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது ஐபிசி 353, 324, 332, 336, 337, 504, 506, 109 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அரசுஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து பொதுஅமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகள் அடங்கும்.

இந்த வழக்கு நாநீத் மாவட்டத்தில் உள்ள தர்மாதிபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி சந்திரபாபு நாயுடுவுக்கு பலமுறை சம்மனும், நோட்டீஸும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட 13 பேரை கைது செய்து வரும் 21-ம் ேததிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி என்.ஆர். கஜ்பியே உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகிவிட்டதால், எங்களை பணிய வைக்க பாஜக செய்யும் மிரட்டல் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் எல். ரமணா தெரிவித்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என். லோகேஷ் கூறுகையில், என்னுடைய தந்தையும், மற்ற இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள்.தெலங்கானா நலனுக்காக அப்போது போராடினார், அதனால், என் தந்தை கைது செய்யப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் கூட கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் பழிவாங்கும் அரசியலின்  சூழ்ச்சி என்று  தெலுங்கு தேசம் கட்சியின்மூத்த தலைவர் பி. வெங்கண்ணா தெரிவித்துள்ளார்.