பீட்டாவிற்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
சல்லிக்கட்டை நேரில் பார்த்ததில்லை. ஆனால், அதன் காணொளியைப் பார்த்து இருக்கிறேன். அதில், மாட்டின் வாலைப் பிடித்து இழுப்பதும், வாடிவாசலில் கொம்பை வைத்து குத்துவதையும் பார்க்கும்போது அது எந்த அளவிற்கு துன்புறுத்தப்படுகிறது என்பதை பார்த்து வருத்தப்பட்டேன். அதனால் தான் சல்லிக்கட்டு கூடாது என்று கூறுகிறேன் என்று கிரண்பேடி சொன்ன வார்த்தையையும் அதற்கு நீங்க போட்டுக்கிட்டு இருக்குறது லெதர் ஷூ. அதுவும் கொடுமை இல்லையா? என்று கூறியதை பார்க்காத ஆளில்லை.

கிரண்பேடியின் இந்த பேச்சுக்கு தமிழர்களிம் எதிர்ப்புக் குரல்கள் புதுச்சேரியிலும் சத்தமாகவே ஒலித்தது.
இந்த நிலையில், பீட்டாவின் புகாரைத் தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவிட்டு இருந்தார்.
இதுவரை மாடுகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று அனைவரும் எண்ணியிருந்தனர். பீட்டாவின் புகாரால் கோவில் யானையை காட்டில் விட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இவர் பீட்டாவின் ஆதரவளாரோ? என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளார்.
இந்த எண்ணம் மக்கள் மனதில் தோன்றியிருந்தால் கூட பரவாயில்லை. இதே எண்ணம் புதுச்சேரியின் அரசு கொறடாவான அனந்தராமனுக்கும் தோன்றியிருக்கிறது.

இன்று அனந்தரமான் மத்திய அரசுக்கு ஒரு அறிவிப்பைத் தெரிவித்துள்ளார்.
அதில், “புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி, பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே, அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றபோது, மக்களை நேரில் தினமும் சந்திப்பது, பெண்களுக்கு உதவுவது என அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை எடுத்துவந்தார் கிரண்பேடி.

ஆனால், தமிழர்களின் பாரம்பரியமான சல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு, தற்போது பீட்டாவின் புகாருக்கு உடனடி நடவடிக்கை என்பது போன்றவற்றால் மக்களின் அவநம்பிக்கையை அவர் சம்பாதித்து வருகிறார் என்பதில் எந்த ஐயமுமில்லை.
