இலங்கை வன்முறையை பயன்படுத்தி அகதிகளோடு தமிழகத்திற்குள் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை மூலம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கை வன்முறையை பயன்படுத்தி அகதிகளோடு தமிழகத்திற்குள் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை மூலம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மக்கள் அனைத்து பொது மற்றும் தனியார் சொத்துகளையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

இதை அடுத்து சுட்டுத்தள்ள முப்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அங்கு வன்முறை தீவிரமடைந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே அகதிகள் பலர் படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அகதிகள் மட்டுமின்றி பல தேசவிரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பித்து இருப்பதாகவும், இவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் கண்காணிப்பை அதிகரிக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், சந்தேகம்படும் படியான படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படியும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் இயக்கத்தத்தினர் மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து நிதி திரட்ட வாய்ப்பிருப்பதாகவும், போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு கடலோரக் காவல் குழுமத்தினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உளவுத்துறையின் இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.