சாலைப் பாதுகாப்பு, விபத்துக்கள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்கவும், பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்காக 2 புதிய செயலிகளை(ஆப்ஸ்) மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

செயலிகள்

‘எம்-பரிவகன்’(m-parivahan) மற்றும் ‘இ-சல்லான்’(e-challan) ஆகிய இரு செயலிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதில் எம்-பரிவகன் எனப்படுவது மக்களை மையப்படுத்திய ஒரு ஆப்ஸ் ஆகும். இந்த ஆப்ஸ் மூலம் வாகனம் மற்றும் டிரைவர் தேடமுடியும், உண்மைத்தன்மையையும் அறிய முடியும்.

இ-சல்லான் எனப்படும் இந்த ஆப்ஸ் போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகிறது.

அறிமுகம்

இது குறித்து சாலைக் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சாலைப்பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக இரு செயலிகளை  வெளியிட அமைச்சதம் முடிவு செய்துள்ளது. இதில் இ-சல்லான் போலீசார் பயன்படுத்துவதாகும். பணமில்லா கட்டணம் செலுத்தும் வகையில் இந்த ஆப்ஸ் அறிமுகமாகிறது. இந்த செயலியில் அனைத்துமாநில அஅரசுகளும் இணைய குறிப்பிட்டகாலக் கெடு அளிக்கப்படும். சில மாநிலங்கள் இந்த செயலியை சோதனை முறையில் செயல்படுத்தி வருகின்றன.

புகார்

எம்-பரிவகன் எனப்படுவது மக்களின் சேவைகளுக்காக அறிமுகமாகிறது. சாலையில் நிகழும் விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்கள் ஆகியவை குறித்து இந்த செயலிகளை தெரிவிக்கலாம். விபத்துக்கள், சாலை விதிமீறல்கள் குறித்து அருகே இருக்கும் போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்து அலுவலகங்களுக்கு செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி புகார் தெரிவிக்கலாம்.

மோட்டார் வாகனச் சட்டப்படி, அந்த புகைப்படங்களையும், புகார்களையும் வைத்து போலீசார் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த செயலியில் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை அதில் அளித்தால், அந்த ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர் குறித்த ஒட்டுமொத்த விவரமும் தெரியவரும்

கார் வாங்கும்போது...

 பயன்படுத்திய கார்களை(செகன்ட்-ஹேண்ட் கார்)வாங்குவோர், அந்த காரின் உண்மைத்தன்மை, காரின் முதலாளி குறித்து அறியமுடியும்.

சாலை பாதுகாப்பு

மேலும், ஒரு டிரைவரை வாடகைக்கு அமர்த்தினால், அவரின் திறமை, அவர் இதற்கு முன் விபத்து ஏதும் ஏற்படுத்தி இருக்கிறாரா?, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து அறிய முடியும். இந்த இரு செயலிகளும் அடுத்த வாரம் 9-ந்தேதி முதல் 15 வரை நடக்கும் சாலைப்பாதுகாப்பு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.