இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்று எண்ணிய பிரதமர் மோடி அவர்கள், பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மக்கள் அனைவரும் ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20க்கு பிறகு நிபந்தனையுடன் கூட தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும் ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய அரசு தெரிவிக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. விவசாயிகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் வயிற்றில் பால் வார்க்கும் படியான அறிவிப்புகள் அதில் அடங்கியுள்ளன. 

இருப்பினும் ஊரடங்கு காலத்தில் நிச்சயம் இவை எல்லாம் செயல்பட வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு சிலவற்றை தெளிவுபடுத்தியுள்ளது. அவை எல்லாம் என்னவென்று பார்க்கலாம், 
 • மே 3ம் தேதி வரை அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை 
 • மே 3ம் தேதி வரை அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இயங்காது
 • தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான விடுதிகள் ஆகியவை தொடர்ந்து மூடப்படும்
 • டாக்ஸி மற்றும் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு
 • மே 3ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம் 
 • மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் 
 • ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். அதே சமயத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்து பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டும் விமான சேவையை பயன்படுத்தலாம் 
 • அதேபோன்று ராணு வீரர்களை அழைத்து செல்வது பொன்ற முக்கிய பணிகளுக்கு மட்டுமே ரயில் சேவையை பயன்படுத்த வேண்டும்
 • இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை
 • சிறப்பு அனுமதி பெற்ற நிறுவனங்களை தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயக்க தடை
 • நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.