மத்திய அரசு புதிய கட்டுப்பாடு, புதிய தொழிலாளர்கள் சட்டத்தின்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்தால் தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு முன் கட்டாயம் தகவல் (நோட்டீஸ்) தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு சீர்த்திருத்தங்ள் செய்து புதிய தொழிலாளர் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூறியதாவது: புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, எந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்னதாக கட்டாயம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

இது, மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்டங்களின் ஒரு பகுதியாகும். மேலும், இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பல்வேறு மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இதுதவிர 44 தொழிலாளர் சட்டங்கள் நான்கு குறியீடுகளாக இணைக்கப்பட்டுள்ளது.

2016 கணக்கெடுப்புபடி, நம் நாட்டில் மொத்தம் 10 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இது மொத்த தொழிலாளர்கள் படையில் சுமார் 20 சதவீதமாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை மாநில அரசுகள் மாவட்ட வாரியாக எடுத்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவால் ஒரு நிறுவனம் மூடப்பட்டால் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ஒரு மாத சம்பளம் வழங்குவதை கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.