வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.


போலி வாக்காளர்களை களையும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த 2015-ல் தேர்தல் ஆணையம் பணிகளை முன்னெடுத்தது. இதன்படி 38 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைத்திருந்தனர். ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உரிய சட்டம் இல்லாமல், ஆதார் எண்களை சேகரிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது.


இதன் காரணமாக ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணிகள் நின்றுபோனது. ஆனால், இந்தப் பணிகளை மேற்கொள்ள வசதியாக சட்டம் மொண்டு வரக் கோரி மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதற்காக 1951- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.


இதற்கான பணிகளில் மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சட்ட வரைவு மசோதா தயாரானவுடன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவும் மத்திய அரசு ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.