சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் நாட்டில் இருக்கும் 6 கோடி வர்த்தகர்களில் பாதியளவு அதாவது 3 கோடி வர்த்தகர்களையாவது கொண்டு வர வேண்டும் என்று வருமானவரி துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தற்போது ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் நாடுமுழுவதும் ஒரு கோடிக்கும் குறைவாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கான 2 நாள் ஆண்டுக் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியபோது, இந்த கருத்தை வலியுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இலக்கை அடைய மத்திய நேரடிவரிகள் வாரியம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ வரி செலுத்துபவர்களின் அளவை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் அதிகாரிகளிடம்பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு கோடிக்கும் குறைவாகவே 72 லட்சம் பேர் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வருகிறார்கள். மேலும் புதிதாக 20 லட்சம்  பேர் பதிவு செய்துள்ளதால், இந்த எண்ணிக்கை 92 லட்சமாக உயரக்கூடும்.

இன்னும் 6 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் வரி செலுத்தாமல் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து வரி செலுத்தும் பிரிவுக்குள் கொண்டுவரப்படுவார்கள். இதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால், அதிகமான எண்ணிக்கையில் வரிசெலுத்தும் பிரிவுக்குள் வருவார்கள். ஜி.எஸ்.டி. வரி வசூலும் அதிகரிக்கும்’’ எனத் தெரிவிக்கின்றன.