இந்தியாவில் 36,000 குழந்தைகள் மாயம்! கண்டுபிடிக்க முடியவில்லை! ஷாக் தகவல்!
இந்தியாவில் 36,000 குழந்தைகள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் கூறியிருக்கிறது.

இந்தியா முழுவதும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், ''மாநிலங்களுக்கு இடையேயான குழந்தை கடத்தல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குத் தொடுப்பதில் மாநில காவல்துறைக்கு இடையூறு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இது போன்ற வழக்குகளை சிபிஐ போன்ற ஒரு தேசிய அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரினார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ''2020ம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலோரை மாநில மற்றும் மத்திய காவல்துறை மீட்டெடுத்தாலும் கிட்டத்தட்ட 36,000 குழந்தைகள் தடயமின்றி காணாமல் போயுள்ளன. அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
கோயா-பாயா' போர்ட்டலைத் தவிர, பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்து நான்கு மாதங்களாகியும் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ''குழந்தை கடத்தல் வழக்குகளின் 'தடுப்பு, பாதுகாப்பு மற்றும் வழக்குத் தொடர' அம்சங்களை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய மனித கடத்தல் தடுப்பு பிரிவுகளை மேம்படுத்துவதற்கும் அமைப்பதற்கும் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.100 கோடி நிதி உதவி அளித்துள்ளது'' என்றும் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி உச்ச்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிகப்பட்சமாக பீகாரில் 2020 முதல் 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது. காணாமல் போன குழந்தைகளில் அதிகபட்சமாக 58,665 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான்கு மாதங்களுக்குள் 45,585 பேரை காவல்துறை கண்டுபிடித்து மீட்டுள்ளது. இருப்பினும் 3,955 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பீகாரைப் போலவே, ஒடிசாவிலும் 2020ம் ஆண்டு முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மேலும் அவர்களில் 4,852 பேரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் பலமுறை வலியுறுத்தியும் டெல்லி, பஞ்சாப், நாகாலாந்து, ஜார்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் காணாமல் போன குழந்தைகள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை வழங்கவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.