தனி நபர் சுதந்திரம் சட்டத்திற்குட்பட்டது தான் என்றும் அரசியல் சாசனப்பிரிவு 21வது பிரிவின்படி எந்தவொரு தனி நபரும், சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணைக்கு உட்பட வேண்டும்  என்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்கள், மானியங்களை பெற, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைப்பதற்கான கடைசி தேதியும் குறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணான PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணோடு, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும், ஏற்கனவே மானியம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கும், ஆதாரை இணைப்பது என்பது, ஒருவரின் தனிமனித உரிமையை குலைக்கும் செயல் என அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, மத்திய அரசு தரப்பில், ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது, பொதுவான சட்ட உரிமை தானே தவிர, அடிப்படை உரிமை அல்ல என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்குகளை ஒரே வழக்காக கருதி, கடந்த 12ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு கேட்டுகொண்டபடி, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், இந்த வழக்கை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டது.

இதையேற்ற உச்சநீதிமன்றம், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

மேலும், தனி மனித உரிமை என்பது, அரசியல் சாசனப்படி அடிப்படை உரிமைதானா? என்பதை தெளிவுபடுத்துமாறு 9 நீதிபதிகள் அமர்வை கேட்டுக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி JS கெஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு ஆதார் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் வாதித்த வழக்கறிஞர், தனி நபர் சுதந்திரம் சட்டத்திற்குட்பட்டது தான் என்றும் அரசியல் சாசனப்பிரிவு 21வது பிரிவின்படி எந்தவொரு தனி நபரும், சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணைக்கு உட்பட வேண்டும்  என்றும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.