ஊரடங்கை மீறி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றினால் 14 நாட்கள் முகாமில் இருக்க நேரிடும் என மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கடந்த 24/ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது.  சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை அரசு மற்றும் போலீசார் எவ்வளவு அறிவுறுத்தினாலும் அதை சிலர் கடைப்பிடிப்பது இல்லை.  தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடுகிறது.  வைரஸ் பரவல் பற்றிய அச்சம் இல்லாத நிலை உருவானது. 

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது.  இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையே, கடந்த சில நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது இடங்களில் நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக, அசைவ உணவுப்பொள்கள் வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.