மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வு ஊதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தியும், கருணைத் தொகையை இரு மடங்காகவும் அதிகரித்தும் மத்திய உத்தரவிட்டுள்ளது.

 தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழுவின் 29-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வூதியம் பெறுவோரின் கணக்குகளில் 88 சதவீதம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டது.

ஏறக்குறைய 50 முதல் 55 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் நாட்டில் உள்ளனர்.  மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு இருந்தனர். அந்த அளவை இரு மடங்கு அதிகரித்து, ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஊழியர்கள் என்பவர்கள் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான நாட்டின் உற்பத்தி சக்தியாக திகழ்ந்தவர்கள்.  அவர்களின் திறனை ஒழுங்குபடுத்தி, சரியான வழியில் கொண்டு செல்வது அவசியம். 

ஓய்வூதியதாரர்களின் அனுபவத்தில் இருந்து  அதிக அளவில் கற்றுக்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.