இன்று நள்ளிரவு முதல் சிகரெட் மீதான வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறையில் ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி அமலான ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஜிஎஸ்டி வரி சிக்கல்கள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிகரெட்டின் அளவை பொறுத்து விதிக்கப்படும் கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் சிகரெட் மீதான இந்த கூடுதல் வரி விதிப்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் சிகரெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத கூடுதல் வரியுடன், சிகரெட்டின் அளவுக்கு ஏற்ப கூடுதல் வரி வசூலிக்கப்படும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.