Asianet News TamilAsianet News Tamil

ரூ. 500 கோடியில் 900 ரெயில் நிலையங்களில் சி.சி.டிவி கேமராக்கள்..!!

cctv cameras in 900 railway stations
cctv cameras-in-900-railway-stations
Author
First Published May 15, 2017, 3:49 PM IST


ரெயில்நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில்  900 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த ரெயில்வே முடிவு செய்துள்ளது.

டெண்டர்

இதன்படி 983 ரெயில் நிலையங்களில் அதிநவீன, துல்லியத்தன்மை வாய்ந்த 19 ஆயிரம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

இதன் மூலம், 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

நிர்பயா நிதி

கடந்த 2013ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் மத்திய அரசு நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், நீண்ட காலமாக இந்த நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்த நிலையில், இப்போது ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த பயன்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, ரெயில் நிலையங்களில் உள்ள நடைபாதைகள், ஓய்வு அறைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும்.

அச்சப்படுவார்கள்

இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்  “ இந்த கண்காணிப்பு கேமிராக்களில் உள்ள காட்சிகளை ரெயில்நிலைய அதிகாரியும் பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது. இதுபோன்ற கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்ற வாசகம் இருந்தால், தவறு செய்பவர்கள் அச்சப்படுவார்கள். அவ்வாறு ஏதேனும் குற்றங்கள் நடந்தால் கூட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து எளிதாக கண்டுபிடிக்க முடியும் ’’ என்று  தெரிவித்தார்.

344 ரெயில்நிலையங்கள்

ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 8 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 344 நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா  ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஷான் இ பஞ்சாப் எக்ஸ்பிரஸ், மும்பை புறநகர் ரெயிலின் பெண்கள் பெட்டிகள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஹம்சபர், தேஜாஸ் எக்ஸ்பிரஸிலும் விரைவில்கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios