கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து சமூக, பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகத்தான் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்துகொண்டிருந்த போது, மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகளும் தடைபட்டன. 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 29 தேர்வுகள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய இந்த 29 தேர்வுகளும் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

எனவே மாணவர்கள், தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற பதற்றமோ, சந்தேகமோ இல்லாமல், தேர்வுகளுக்காக தயார் செய்வதில் கவனம் செலுத்தலாம்.