பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நேற்று தொடங்கியது.

சுட்டு கொலை

துணிச்சல் மிகுந்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன்தினம் அவரின் வீட்டு முன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 விசாரணை குழு

இதையடுத்து கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக விசாரிக்க உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை முதல்வர் சித்தராமையா அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவில் பி.கே.சிங் உள்பட 21 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவினர் நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

கண்காணிப்பு கேமரா

கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து 3 கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது வீட்டிற்கு சென்று கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை போலீஸ் அதிகாரிகள் பெற்றுச்சென்றுள்ளனர்.

மேலும், காந்திபஜாரில் உள்ள கவுரி லங்கேஷின் அலுவலகத்திற்கு சென்ற சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரிகள்  விசாரணை நடத்தி, அங்கு  

சில ஆவணங்களையும், சமீபகாலமாக அவரது வாரப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் பற்றிய விபரங்களையும் திரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கொலை நடப்பதற்கு முன்பாக ஒரு வாரம் கவுரி லங்கேஷ் யாருடன் எல்லாம் செல்போனில் பேசி இருக்கிறார், அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி சிறப்பு விசாரணை குழுவின் ஒரு பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாட்டுத்துப்பாக்கி

 இதுதவிர கவுரி லங்கேசை கொலை செய்ய மர்மநபர்கள் பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கி என்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  அந்த துப்பாக்கியும், எழுத்தாளர் கலபுரகியை கொலை செய்ய மர்மநபர்கள் பயன்படுத்திய துப்பாக்கியும் ஒன்று தானா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

அடையாளம்?

கவுரி லங்கேஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் மட்டும், அவரை ஒரு மர்மநபர் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.ஆனாலும் அந்த காட்சிகளில் மர்மநபர் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும், அவரது உருவம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து, கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபரின் உருவ படத்தை வரைவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.