உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவனையில் 72 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் செயல்படும் பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 72 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த 7-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. முதல் அமைச்சர் ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பாஜக போலியான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர். பாஜக சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருக்கும். அடுத்து வரும் தேர்தலில் உத்தரப்பிரதேச மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்த மாநிலத்தில் சமாஜ்வாதியை விட பாஜக சிறப்பாக பணியாற்றியுள்ளது என்று எதையாவது சொல்ல முடியுமா? பாஜக சாலை அமைத்ததா?

வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு தந்ததா?. மத்திய அரசும் மாநில அரசும் சி.பி.ஐ.க்கு நெருக்கமாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ செயல்பட்டு வருகிறது. எனவே கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். நல்ல காலம் வரும் என்று கூறி மக்களை முட்டாளாக்கி விட்டு மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கோரக்பூர் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் நுதன் தாகூர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஆக்சிஜன் பற்றாக் குறையால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகவும், இதனை மூடி மறைப்பதற்காக மாநில அரசு தவறான தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் தயா சங்கர் ஆகியோர், 6 வாரத்திற்குள் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை அக்டோபர் 9-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.