Asianet News TamilAsianet News Tamil

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது... கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, ஜே.டி.எஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Cauvery Water: Farmers pro Kannada outfits stage protest in Mandya over Cauvery row sgb
Author
First Published Sep 23, 2023, 11:17 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்திவரும் நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கவே கூடாது என்று கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தரப்பில் தொடரப்பட்ட இருவேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது.

அதாவது, ஒழுங்காற்றுக்க் குழு மற்றும் மேலாண்மை வாரியத்தின் சமீபத்திய பரிந்துரையின்படி, கர்நாடகாவில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்குத் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், செப்டம்பர் 26ஆம் தேதி வரை மட்டும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுங்கள் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை விவாதங்கள் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் தினமும் 3,000 முதல் 4,000 கன அடி தண்ணீர் திறந்து வருகிறோம். ஆனால் மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி 5,000 கனஅடி வீதம் எங்களால் திறக்க முடியாது. இருப்பினும், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகலாம் என்பதால் இதைப் பதிவு செய்ய முடியாது" என்கிறார்.

Cauvery Water: Farmers pro Kannada outfits stage protest in Mandya over Cauvery row sgb

ஆனால், கர்நாடக விவசாயிகள் இதற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

சாம்ராஜ்நகரா, ராமநகரா, பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய குழுக்களும் கன்னட அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்பட பகுதிகளிலும் விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 லேண்டர், ரோவரை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சி ஒத்திவைப்பு: இஸ்ரோ

அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜே.டி.எஸ் ஆகிய கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முழுஅடைப்புக்கு தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆதரவு அளித்து கடைகளை மூட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி இன்று மண்டியாவில் திட்டமிட்டப்படி முழுஅடைப்பு போராட்டம் நடந்துவருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டியா மாவட்டத்திலும் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பரமேஸ்வர் எச்சரித்துள்ளார்.

அதே சமயத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பந்த் அழைப்பைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். முழு அடைப்பு நடத்துவது மாநிலத்திற்கு உதவாது என்றும் வாதிட்ட அவர், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகின்றன என்றும் விமர்சித்தார்.

"பந்த் உதவாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம். விவசாயிகளுக்காக போராடுவோம். அவர்களின் நலன்களை முடிந்தவரை பாதுகாத்துள்ளோம், தொடர்ந்து செய்வோம். முழு அடைப்புப் போராட்டத்தின்போது வன்முறை நடந்தால் அது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும்'' என்று டி.கே. சிவகுமார் கூறினார்.

சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதில் காங்கிரஸ் அரசு தாமதம் செய்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கு பதிலளித்த சிவகுமார், "தாமதம் என்ற கேள்விக்கு இடமில்லை, நாங்கள் நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்" என்றார்.

பெங்களூருவில் எலெக்ட்ரானிக் சிட்டி, மல்லேஸ்வரம், மைசூரு பேங்க் சர்க்கிள் பகுதிகளில் போராட்டம் நடத்திய கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டின் படத்தை தீ வைத்து எரித்தும், மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.யின் அருவருப்பான பேச்சு; எதிர்க்கட்சிகள், சபாநாயகர் கடும் கண்டனம்

Follow Us:
Download App:
  • android
  • ios