காவேரி நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றங்கள் செய்யக்‍கோரி, தமிழக அரசு சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட வழக்‍கு விசாரணை, பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் 3 வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெறும் என்றும், அதுவரையில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு விநாடிக்‍கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

காவேரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.

அதில், தமிழகத்துக்கு பாதகமான சில அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. காவேரி மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களின் பரப்பளவு 29 லட்சம் ஏக்கரில் இருந்து 24 புள்ளி 5 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது.

அதேசமயம், கர்நாடக மாநிலத்தில் காவேரி பாசனப் பரப்பளவு 6 லட்சம் ஏக்கரில் இருந்து 18 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது.

மேலும், காவேரியில், கர்நாடகம் தமிழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தமிழகத்தின் காவேரி பாசனப் பரப்பை குறைத்ததையும், கர்நாடகத்தின் பாசனப் பரப்பை அதிகரித்ததையும் ஏற்க முடியாது என்றும் தமிழகத்திற்கு கர்நாடகா ஆண்டுதோறும் அளிக்க வேண்டிய 192 டி.எம்.சி. அடி தண்ணீர் போதாது - கூடுதலாக 65 டி.எம்.சி. அடி தண்ணீர் தரவேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது.

ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்றும் எனவே, தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மாதம் 9-ம் தேதி மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தது.  
அதன்படி, தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்‍கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர் திரு.சேகர் நாப்தே தனது வாதத்தில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலம்தான் பிரச்சினைக்‍கு சுமூக தீர்வு காணமுடியும் என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் தமிழகத்திற்கு இன்னும் 4 புள்ளி 8 டி.எம்.சி. அடி தண்ணீரை திறந்துவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் வாதங்களைக்‍ கேட்ட நீதிபதிகள், இந்த வழக்‍கு விசாரணை பிப்ரவரி 7-ம் தேதி முதல் நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்‍கு நடைபெறும் என்றும், சுமார் 3 வாரங்களுக்‍கு இந்த விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

அதுவரையில், ஏற்கெனவே உத்தரவிட்டபடி கர்நாடகம் தமிழகத்திற்கு விநாடிக்‍கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.