வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்‍கும் விதமாக இன்று முதல் பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நாளொன்றுக்‍கு ஒரு நபர் 2 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்‍ கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து 9-ம் தேதி வங்கிகள் இயங்காது எனவும், 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் ஏ.​டி.எம் மையங்கள் இயங்காது என அறிவிக்‍கப்பட்டது. இதன்பின்னர் 10-ம் தேதி முதல் வங்கிகளும், 11-ம் தேதி முதல் ஏ.டி.எம். மையங்கள் இயங்க ஆரம்பித்தன. 

இதனையடுத்து வங்கிகளில் பழைய நோட்டுகளை 4,500 ரூபாய் வரை மாற்றிக்‍கொள்ளலாம் என அறிவிக்‍கப்பட்டது. தற்போது 2,000 ரூபாயாக குறைக்‍கப்பட்டுள்ளதாகவும், நீண்டவரிசையில் மக்‍கள் காத்திருப்பதை தவிர்க்‍கவே இந்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்‍களுக்‍கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருவதாகவும், ஏ.​டி.எம்களில் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும், அரசிடம் தேவையான பணம் உள்ளதால், மக்‍கள் பீதியடைய தேவையில்லை எனவும் மத்திய பொருளாதார விவகாரங்களுக்‍கான செயலாளர் திரு. சக்‍தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளிலும் பணம் எடுப்போரின் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்‍கும் விதமாக புதிய நடைமுறை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி உடன்படிக்‍கை ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதன்படி, இந்த 3 எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளில் எஸ்.பி.ஐ.யின் பாயிண்ட் ஆஃப் சேல் என்ற இயந்திரம் உள்ளது. இதனை பயன்படுத்தி பெட்ரோலிய பங்குகளில் பொதுமக்‍கள் தங்களது டெபிட் கார்டுகள் மூலம் நாளொன்றுக்‍கு நபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் வரை ரொக்‍கமாக பெற்று செல்லாலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், இன்று வரை சுங்கக்கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இது வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறீிவித‌்துள்ளது.