பாலக்காடு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவை கரும்புக்கடை பாரதி நகரை சேர்ந்தவர் பைரோஜ்பேகம் (65). இவருக்கு மெகராஜ் (31), பீனாஷ் (30), பரிதா (29), ஷாஜிதா (28) உள்பட 5 மகள்களும், மொய்தீன்அபு என்ற மகனும் உள்ளனர். பைரோஜ் பேகத்தின் அண்ணன் ஷேக் பாலக்காடு சந்திர நகரில் வசித்து வருகிறார். அவரது மருமகள் கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சீர் செய்வதற்காக நேற்று மதியம் பைரோஜ் பேகம் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்பட 12 பேருடன் ஆம்னி வேன் ஒன்றில் கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. 

அப்போது, வேன் வாளையார் அருகே சென்றிக்கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடி இருந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த மெகராஜ், இனியாபர்தா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், சாலை விபத்தில் உயிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.