ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகளை படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகளை படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான விரிவான நெறிமுறைகள் நாளை யுஜிசி தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மாணவர் ஒரு நேரத்தில் ஒரு டிகிரி மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்க மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது. இந்த நிலையில் இன்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர் இரண்டு டிப்ளமோ படிப்புகளையோ, 2 இளங்கலைப் படிப்புகளையோ அல்லது 2 முதுகலை படிப்புகளையோ ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

இரண்டு முழுநேரப் படிப்புகளையும் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ படிக்கலாம். இதுதவிர முதுகலைப் படிப்புக்குத் தயாரான ஒரு மாணவர், தனக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு தளத்தில் இளங்கலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பினால், அதற்கும் யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது. எனினும் கல்லூரி வகுப்புகள் மட்டும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய யுஜிசி தலைவர் மாமிதலா ஜெகதீஷ் குமார், மார்ச் 31ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன.

புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி, ஒரே நேரத்தில் முறையான மற்றும் முறைசாரா கல்வி முறைகள் மூலம் வெவ்வேறு படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வெவ்வேறு திறன்களை அடையப் போதிய சுதந்திரம் வழங்கப்படும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இனிமேல் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
