முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகனும், காஃபி டே நிறுவனருமான சித்தார்த் திடீரென மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, நேத்ராவதி நதியில் அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆளுநராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மூத்த மகள் மாளவிகாவின் கணவர் சித்தார்த். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்தார்த் கேஃபி காஃபி டே என்ற காபி தூள் நிறுவனம் நடத்தி வந்தார். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்நிறுவனம் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் சுமார் 10,000 மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று மாலை பெங்களூருவில் இருந்து 375 கி.மீ. தொலைவில் மங்களூருவில் நேத்ராவதி நதியின் அருகே சென்றவுடன் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு நடந்து சென்றவர் பின்னர், ஒருமணிநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், இந்த செய்தியால் அறிந்த எஸ்.எம். கிருஷ்ணா வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.