விவசாயிகளுக்கு மலிவு விலையில் டிஏபி உரம் கிடைப்பதை உறுதிசெய்ய, மத்திய அரசு ஜனவரி 1, 2025 முதல் டிஏபி உர மானியத்தை நீட்டித்துள்ளது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 மானியம் வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தற்போதுள்ள ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தைத் தாண்டி , டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான (டிஏபி) சிறப்புத் தொகுப்பை நீட்டிக்க புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மானிய நீட்டிப்பு ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. டிஏபி உரங்களுக்கான மானியம் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மானியம் தொடரும். இது விவசாயிகளுக்கு மலிவு விலையில் டிஏபி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

இந்த மானிய நீட்டிப்பு உரங்களின் விலையில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் முகமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் டிஏபி உரங்கள் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. விவசாயிகளின் நலன் மற்றும் அத்தியாவசிய விவசாய இடுபொருட்களை சுலபமாகக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2010 முதல், சிறப்பு மானியத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் DAP உள்பட பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 28 தரங்களில் அவை கிடைக்கின்றன.

ஜூலை 2024 இல், இதேபோன்ற சிறப்பு மானியத் தொகுப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஏப்ரல் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையிலான காலக்கட்டத்திற்கு சுமார் ரூ. 2,625 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.