தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பெண் மருத்துவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்த்தனர். இந்த நிலையில் பெண் மருத்துவரை எவ்வாறு கொன்றனர் என்று நடித்து காட்டுவதற்காக, குற்றவாளிகளை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிய அவர்கள், தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனால் வேறு வழியின்றி குற்றவாளிகளை போலீசார் சுட்டனர். இதில் நான்கு பேரும் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் உயிரிழந்தனர்.

இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையினரை பாராட்டி மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஹரியானவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசார் அனைவருக்கும் 1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். 'ரா குரூப் பவுண்டேஷன்' என்கிற நிறுவனத்தின் தலைவர் நரேஷ் செல்பார் போலீசாரின் துணிச்சலை பாராட்டி பரிசு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.