இந்தியா, ஜப்பான் கூட்டு முதலீட்டுடன், அகமதாபாத்- மும்பை இடையே முதன் முதலில் இயக்கப்பட உள்ள புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 14-ந்தேதி நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விழாவில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை புல்லட் ரெயில் கிடையாது. இதை நனவாக்கும் வகையில் கடந்த முறை பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் சின்ஷோ அபேயுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், முதன்முதலில் புல்லட் ரெயிலை ஆமதாபாத்-மும்பை நகரங்களுக்கு இயக்குவது என முடிவானது. முதன்முதலில் இயக்கப்பட உள்ள இந்த புல்லட்ரெயிலில் 750 பேர்வரை பயணிக்கலாம். இந்த புல்லட்ரெயல் இயக்கப்படும் போது, இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 7 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரமாகக் குறையும்.

இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.1.10 லட்சம் கோடியாகும். இதில் பாதியளவு நிதியை ஜப்பான் அரசுவழங்குகிறது. இந்த திட்டம் 2023 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2022ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு எண்ணுகிறது.

மும்பை முதல் ஆமதாபாத் வரை 12 ரெயில் நிலையங்கள் உருவாக்கவும், ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் வகையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பையில் பி.கே.சி. பகுதி மற்றும் போஸ்சர் பகுதிகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய குகையும், 7 கி.மீ தொலைவுக்கு நீருக்குள் பாதையும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.