பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம் நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூரில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது. உணவு டெலிவரி ஊழியர்கள் போல வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி 8 பேர் காவல்நிலையத்தில் சரணைடந்தனர். இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடற் கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே கூடிய ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் இந்த கொலை தொடர்பாக் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் மறியல் போராட்டம் நடத்தினர்.
தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவரின் பதிவில் “ பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான திரு ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருப்பான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர், மேலும் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொடூர படுகொலை! உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்திய கமல்ஹாசன்!
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
