‘டிஜிட்டல் பேமெண்ட்’டுக்கு இலவச உதவி எண்கள் அறிமுகம்

 

டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் வரும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு மக்களுக்கு விடை அளிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல். மற்றும் நாஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து ‘14444’ என்ற இலவச உதவி எண்ணைமத்தியஅரசு அறிமுகம் செய்துள்ளது.

‘14444’ உதவி எண்

டிஜிட்டல் பேமெண்ட்களான ‘பீம்’ ஆப்ஸ், இ-வாலட்கள், ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்துதல் ஆகியவற்றில் எழும் சந்தேகங்களுக்கு மக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

ஆங்கிலம், இந்தி

இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் ஜே.எஸ். தீபக் கூறுகையில், “ நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு டிஜிட்டல்பேமெண்ட் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க பி.எஸ்.என்.எல், நாஸ்காம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து  ‘14444’ என்ற இலவச உதவி எண்ணை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பேசும்போது, அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதில் தரப்படும். விரைவில் மற்ற மொழிகளில் விரிவுபடுத்தப்படும்.

அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை அளிப்பதாக அரசிடம் தெரிவித்துள்ளனர் என்பதால் செல்போன் மூலமும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்'' என்றார்.

இந்த சேவைக்கான கட்டணத்தை முதலில் தொலைத்தொடர்பு மற்றும் நாஸ்காம் நிறுவனம் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக இருந்தது. அதன்பின் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட்கள்

இதன்படி, யு.எஸ்.எஸ்.டி., யு.பி.ஐ., பீம், மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு, இ-வாலட், உள்ளிட்ட எந்த டிஜிட்டல் பேமெண்ட்டையும் பயன்படுத்த தொடங்கும் மக்கள் ‘14444’ என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற முடியும்.

பரிமாற்ற மதிப்பு அதிகரிப்பு

நவம்பர் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், டிஜிட்டல்பேமெண்ட் பரிமாற்ற அளவு 97 சதவீதத்தில் இருந்து, 5,135 சதவீதமாக உயர்ந்துள்ளது.

யு.எஸ்.எஸ்.டி மூலம் செய்யும் பரிமாற்றம் நவம்பர் 8-ந்தேதிக்கு முன் நாள் ஒன்றுக்கு ரூ. ஒரு கோடி இருந்த நிலையில், டிசம்பர் 25 அன்று 4,061 சதவீதம் அதிகரித்து  இது ரூ. 46 கோடியாக உயர்ந்தது.

யு.பி.ஐ. பரிமாற்றம் 1,342 சதவீதத்தில் இருந்து 3721 சதவீதம் உயர்ந்து மதிப்பின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.1.93 கோடியில் இருந்து, ரூ.14 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.