தெலுங்கானாவில் பிரதமர் மோடி வருகையைப் புறக்கணித்த கேசிஆர்
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கலந்து கொள்ளாது என்று கூறிய கே.டி.ராமராவ், தெலுங்கானா மக்களை அவமானப்படுத்திய பிரதமர் மோடி எப்படி தெலுங்கானாவுக்கு வரலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தங்கள் மாநிலத்திற்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்து, வாரங்கலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதனை பிஆர்எஸ் செயல் தலைவரும் அமைச்சருமான கே.டி. ராமராவ் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
வாராங்கலில் பிரதமர் மோடி ரயில்வே உற்பத்தி பிரிவு மற்றும் சில நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமராவ், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தங்கள் கட்சி கலந்துகொள்ளாது என்று தெரிவித்தார்.
மனீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கம்! டெல்லி மதுக்கொள்கை ஊழலில் அமலாக்கத்துறை நடவடிக்கை
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) வாராங்கலுக்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடியை மாநில பாஜகவினர் நேரில் சென்று வரவேற்றனர். ஆளும் பிஆர்எஸ் கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவோ வேறு எவருமோ பிரதமரை நேரில் சென்று வரவேற்கவில்லை. வாராங்கல் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
"தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி மாநில மக்களை அவமானப்படுத்தி, பிரிவினையின்போது மாநிலத்திற்கு அளித்த எந்த உறுதிமொழியையும் மதிக்காமல் நடந்துகொண்ட பிரதமர் மோடி எப்படி தெலுங்கானாவுக்கு வருகிறார்?" என்று ராமராவ் கேள்வி எழுப்பினார்.
சந்திரயான் 3 விண்ணில் பாயும்போது நேரில் பார்க்கணுமா? மிஸ் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணுங்க!
கடந்த ஆண்டு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதைச் சுட்டிக்காட்டிய ராமராவ், "இப்போது தெலுங்கானாவுக்கு வரும்போது, ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிராக வெறும் 521 கோடி ரூபாயில் பழுதுபார்க்கும் பிரிவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்" என்று குறை கூறினார். ரயில்வே பிரிவு அமைப்பதாகக் கூறும் பாஜகவின் மலிவான தந்திரத்துக்கு தெலுங்கானா மக்கள் பலியாக மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசு தெலுங்கானாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கைகழுவி வருவதாகக் குற்றம்சாட்டிய ராமராவ், மஹபூபாபாத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்ட பழங்குடியினர் பல்கலைக்கழகத்தையும் பாஜக அரசு, வேண்டுமென்றே மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் அமைப்பதற்காக 360 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒப்படைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பையாரத்தில் எஃகு ஆலை அமைக்கும் உறுதிமொழியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்று சாடினார்.