பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ள உச்சிமாநாடு கோவாவில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள BRICS என்ற அமைப்பின் 8-வது உச்சி மாநாடு கோவா தலைநகர் பனாஜியில் நேற்று தொடங்கியது.
முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, பங்களாதேஷ், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அந்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், ரஷ்ய அதிபர் Vladimir Putin, சீன அதிபர் Xi Jinping ஆகியோரை பிரதமர் திரு. நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, என்.எஸ்.ஜி-யில் இந்தியா உறுப்பினராக தென் ஆப்பிரிக்கா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற உள்ளது. இதில், தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் பாகிஸ்தானின் எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் திரு. மைத்ரிபால சிறிசேன கோவா வந்தடைந்தார். பிரிக்ஸ் மாநாட்டின் போது, பிரதமர் திரு.நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.
