Breaking : மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல்காந்தி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.
மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பியாக நாடாளுமன்றத்தில் நுழைவது உறுதியானது. இதை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மக்களவை செயலகம் ராகுல்காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறாதாதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த பின், உடனே தகுதி நீக்கம் செய்த சூழலில், அதனை திரும்ப பெற தாமதம் ஏன் காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் பிரதமர் மோடி, ராகுல்காந்தியை பார்க்க பயப்படுகிறார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறுவதாகவும், அவர் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக தொடரலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ல் ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு தகுதிநீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்வர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அவதூறு வழக்கின் பின்னணி
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி “ "எல்லா திருடர்களுக்கும் மோடி எப்படி பொதுவான பெயர் உள்ளது?" என்று லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து ராகுல்காந்தி, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. மறுநாள், அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து ராகுல்காந்தி செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்த்து மனுதாக்கல் செய்தார். ஏப்ரல் 20 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், அவரின் தண்டனையை நிறுத்த மறுத்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல்காந்தி கடந்த மாதம் 15-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 4-ம் தேதி ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும், ராகுல்காந்திக்கு எதற்காக அதிகபட்ச தண்டனை வழங்கியது என்றும், இது குறித்து கீழமை நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் ராகுல்காந்தி தனது பதவியை இழந்திருக்க மாட்டார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்ட நீதிபதிகள் தண்டனை காரணமாக ஒரு தனிநபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு வாசலில் நிறுத்தும்போது வெடித்துச் சிதறிய கார்... காருக்குள் இருந்த இளைஞர் பரிதாப பலி