தற்போது புழக்கத்தில் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்களை, செல்லாத வகையாக மத்திய அரசு முடக்கினால், கருப்பு பணம் வெளியே வரும் என இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், தொழில்நுட்பத் துறை முதலீட்டாளருமான டி.வி. மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.
நாட்டில் கருப்புப் பணத்தை வைத்திருப்போர் அவற்றைத் தாமாக முன்வந்து அறிவித்து, உரிய வரியையும், அபராதத்தையும் செலுத்தினால் கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக 4 மாத கால அவகாசமும் அளித்தது.
இந்த 4 மாத அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இத்திட்டத்தின்கீழ் அவகாசம் கொடுக்கப்பட்ட 4 மாதத்தில் மட்டும் ரூ.65,250 கோடி கருப்புப் பணம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. வரி, அபராதம் மூலம் அரசுக்கு ரூ.29,362 கோடி வருவாய் கிடைத்தது.
கருப்புப் பண வெளியீடு தொடர்பான கணக்குகளை முழுமையாக முடித்த பிறகு இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் ஐசிஏஐ தலைவர் தேவராஜ் ரெட்டி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், "கருப்புப் பண வெளியீடு தொடர்பாக இப்போது கிடைத்துள்ள தகவலின்படி ரூ.71,000 கோடிக்கு மேல் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே ரூ.65,250 கோடி கருப்புப் பணம் வெளிவந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இறுதிக் கணக்கீடு முடிந்த பிறகு இந்தத் தொகை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது என்றார்.
இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், தொழில்நுட்பத் துறை முதலீட்டாளருமான டி.வி. மோகன்தாஸ் பை கூறுகையில், "ரூ.65,250 கோடி மீட்கப்பட்டது, கருப்புப் பண மீட்பின் ஒரு சிறிய பகுதிதான்.
ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாத வகையாக மத்திய அரசு அறிவித்தால், மேலும் பல ஆயிரம் கோடி கருப்புப் பணம் வெளியாகும்'
என்றார்.
