கர்நாடகவில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குமாரசாமி அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் முதல்வர் பதவி தொடர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக நேரடியாக தொல்லை கொடுக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சி மறைமுக நெருக்கடி தருகிறது என்று மேலிட பொறுப்பாளரிடம் குமாரசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

கர்நாடக காங்கிரஸ் மேலிட  பொறுப்பாளர் கேசி.வேணுகோபாலை முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பிரச்சனைகளை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குமாரசாமி அவரிடம், கர்நாடகா காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசலால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தினமும் புதுவிதமாக பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இது போன்ற தொந்தரவுகளை கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். 

உங்களுக்கு கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்றால் ஆதரவு தாருங்கள் இல்லை என்றால் நேரடியாக தெரிவித்து விடுங்கள் என்றார். மேலும் வலுக்கட்டாயமாக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே பா.ஜ.க.வினர் ஆபரேஷன் தாமரை மூலம் ஆட்சியை கவிழக்க நேரடியாக பல்வேறு தொந்தரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மறைமுகமாக தொல்லை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.